முதல் காரை உருவாக்கிய பென்ஸ்


1886ல் தான் இன்றைய நவீன பெட்ரோல் கார்களுக்கான அடித்தளம் உருவானது. ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் பென்ஸ் என்பவர், பெட்ரோலில் இயங்கும் முதல் காரைக் கண்டுபிடித்தார். நம்மூர் ரிக்ஷாக்களைப் போல் மூன்று சக்கரங்கள் கொண்டதாக முதல் கார் இருந்தது. இதை கார்ல் பென்ஸ், பேட்டன்ட் மோட்டார் கார் என்று பெயரிட்டு அழைத்தார். இவர்தான், முதல் கார் தொழிற்சாலை உருவாக்கி, கார்களை பொதுவிற்பனைக்கு கொண்டு வந்த பெருமைக்கு உரியவர் ஆவார்.

அந்த முதல் காரில், பாதுகாப்பு மேற்கூரைகள் எல்லாம் அப்போது இல்லை. ஸ்டீரியங் கிராங்க், இருவர் அருகருகில் அமர்ந்து கொள்ள இருக்கை இவைதான் கார். பின் பகுதியில், ஒற்றை சிலிண்டர் கொண்ட இன்ஜின், குளிரூட்டும் நீர்தொட்டி, பிரேக் பட்டைகள் இவை மட்டும்தான்.

துணியிலிருந்து அழுக்கைப் போக்கும் ‘லிக்ராய்’ என்றழைக்கப்பட்ட பென்சின் திரவம் தான் எரிபொருளாகப் பயன்பட்டது. இதனால் தான், இன்றும் ஜெர்மனியில் இந்த எரிபொருள் வாஷ்பென்சின் என்றழைக்கப்படுகிறது. கார்ல் பென்ஸ், தனது காரில் வெற்றிகரமாக பேட்டரியைப் பயன்படுத்தினார். இதன்மூலம் எலெக்ட்ரிக் ஸ்பார்க் ஏற்படுத்தி எரிபொருளைப் பற்றவைக்க முடிந்தது. அதற்கு முன்னர், வெளியிலிருந்து நாம்தான் எரிபொருளை பற்ற வைக்க வேண்டும். முதல் காரின் அதிகபட்ச வேகம் எவ்வளவு தெரியுமா? 16 கி.மீ. இந்த கார் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து 1903இல், கார் தயாரிப்பாளர் போர்டு கொண்டு வந்த Model T கார் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


புதிததல்ல, ஹைட்ரஜன், எலக்ட்ரிக் கார்கள்

1768ல், நிக்கோலஸ் ஜோசப் என்பவர் நீராவியால் இயங்கும் காரை வடிவமைத்தார். ராட்சச உருவம் கொண்ட ரயில் போன்ற வாகனங்களுக்கு வேண்டுமானால், நீராவி இயந்திரம் ஒத்துவரலாம். ஆனால், சிறிய உருவம் கொண்ட காரில், பத்து அண்டா அளவுக்கு பாய்லரை பொருத்தினால் என்ன ஆகும்? பார்க்கவே நகைப்பாக இருந்தது முதல் நீராவி கார். அதுமட்டுமன்றி நீராவி காரில், ஸ்டீயரிங் (Steering) இல்லாததால், கண்ட இடங்களிலும் முட்டிக்கொண்டு நிற்கும் நிலை ஏற்பட்டது. 
1807ல் பிரான்காய்ஸ் ஐசாக் ரிவாஸ் என்பவர், ஹைட்ரஜனால் இயங்கும் உள்ளெரி இன்ஜின் (Internal Combustion Engine) பொருத்தப்பட்ட காரை வடிவமைத்தார். இங்கு, பெட்ரோல் காருக்கு முன்பே ஹைட்ரஜன் கார் வந்துவிட்டது என்பதை மாணவர்கள் கவனிக்க வேண்டும். எனினும், ஹைட்ரஜன் டாங்க் வெடித்துவிட்டால், சுற்றுவட்டாரமே காலியாகி விடும் என்ற அச்சம் அன்றைய மக்களிடையே இருந்தது. இதனால், அந்த முயற்சி வெற்றி பெறாமல் போனது.  அதுமட்டுமல்ல, ஊரெல்லாம் இன்று பரவலாகப் பேசப்படும் எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பமும், பெட்ரோல் காரை விட வயதில் மூத்தது. ஆம், 1859இல் ரீசார்ஜ் பேட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எலெக்ட்ரிக் கார்களுக்கான முயற்சிகளும் தொடங்கிவிட்டன. 1886இல் உருவான பெட்ரோல் காருக்கும், 1888இல் முழுமைப் பெற்ற எலெக்ட்ரிக் காருக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் வெற்றி பெற்றது பெட்ரோல் கார்கள்தான்.

அடேங்கப்பா!
பென்ஸ் கார் உருவாகி 16 ஆண்டுகள் கழித்து, மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் போகும் கார் உருவாக்கப்பட்டது. 1928இல், 192 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் கார் உருவானது. 1938இல், 432.7 கி.மீ வேகத்தில் செல்லும் கார் உருவாக்கப்பட்டது. இன்னொரு டிரைவர் அந்தச் சாதனையை முறியடிக்க முயன்று இறந்து போனார். பொது சாலையில், இந்தச் சாதனையை இன்றுவரை யாருமே முறியடிக்கவில்லை.



Comments