நர்சுகள் அறிமுகமான விதம்
நர்சுகள் அறிமுகமான விதம்
நியூட்ரைர் (nutrire) என்னும் லத்தீன் சொல்லிலிருந்து நர்சிங் என்னும் வார்த்தை பிறந்தது. மருந்து, உணவு, முதலியவற்றை அன்புடன் ஊட்டி, நம்மை உற்சாகப்படுத்துபவர் என்று பொருள். பண்டைய காலத்தில் இருந்தே படைவீரர்களுக்கு மருந்து வைத்துக்கட்ட உதவும் பெண் மற்றும் ஆண் நர்சுகள் இருந்தனர். உலகின் முதல் நர்சிங் பள்ளி, 1860ல் லண்டனில் திறக்கப்பட்டது.
டாக்டருக்குத் தண்டனை...!
பழங்காலத்தில் பாபிலோனியாவில் அறுவைச் சிகிச்சையின்போது, ஒரு நோயாளி இறந்துவிட்டால், அறுவைச் சிகிச்சை செய்த டாக்டரின் வலது கையை துண்டித்து விடுவார்கள். பாரசீகத்தில் (நவீன ஈரான்) அறுவைச் சிகிச்சையில் மும்முறை தொடர்ந்து தோல்வி கண்டால், அந்த மருத்துவர் அந்த நாட்டில் மருத்துவராகப் பணியாற்ற முடியாது என்ற சட்டம் இருந்தது.
முதல் மருத்துவ உடை!
அறுவைச் சிகிச்சை செய்யும்போது, கையுறைகள், முக உறைகள், கெளன்கள் போன்றவற்றை அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணியும் முறை 1875ம் ஆண்டு அறிமுகமானது.
முதல் மருத்துவப் பத்திரிகை...
ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில், அறிவுத் தாகமும், விஞ்ஞான ஆராய்ச்சிகளும் வளர்ந்ததால், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளின் விவரங்களை பரிமாறிக்கொள்ள விஞ்ஞான பத்திரிகைகளையும், மருத்துவ இதழ்களையும் தொடங்கினர். பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மருத்துவ இதழ்கள் வெளிவர ஆரம்பித்தன. முதல் மருத்துவப் பத்திரிகை ‘மெடிசினா குரிஸோ’ என்பதாகும். இது ஆங்கிலப் பத்திரிகை. இதன் பிறகே பல மொழிகளிலும் மருத்துவப் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.
சுத்தமான குடிநீர்
நோய் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், சுத்தமான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென பாபிலோனியர்கள் சொன்னார்கள். இவர்கள் நெருப்பைப் போல் நீரையும் கடவுளாக வணங்கினார்கள்.
↔– சிவசக்தி
Comments
Post a Comment