நண்பர்களின் நண்பன் எப்படி கிடைத்தான்?
நமக்கு நேரடியாகத் தெரிந்த நண்பர்கள் என்றால், மிஞ்சிப்போனால் 150 பேர் இருப்பார்கள். ஆனால், கொஞ்சம் பேஸ்புக்கில் சென்று பாருங்கள், உங்களோடு எத்தனை நண்பர்கள் உள்ளார்கள் என்று... சர்வ சாதாரணமாக இரண்டாயிரத்துக்கும் குறைவில்லாமல் இருப்பார்கள். இது எப்படி?
நண்பர்கள் மட்டுமன்றி, நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்வதால்தான், அது சாத்தியமாகிறது. சமூக வலைத்தளங்களுக்கு இந்த தத்துவம் தான் அடிப்படையானது. இதை முதன்முதலாக செயற்படுத்திக் காட்டி, இன்றைய சமூக வலைதளங்களுக்கு அடித்தளம், சிக்ஸ்டிகிரீஸ்.காம் என்ற வலைத்தளம்தான்.
அதென்ன ஆறு கோண தத்துவம்?
1997ல் தொடங்கப்பட்டது Sixdegrees.com. இதற்கு பின்னணியில் பிரபல தத்துவம் ஒன்று உண்டு. இந்த உலகின் கடைக்கோடியில் இருக்கும் எந்த மனிதராக இருந்தாலும், நமக்கும் அவருக்கும் அதிகபட்சம் 6 படிகள் மட்டுமே இடைவெளி இருக்கும். 1929ல், ஃபிரிகிஸ் காரிந்தி என்பவர், இந்தத் தத்துவத்தை முன்வைத்தார். உதாரணத்துக்கு, பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டை எடுத்துக்கொள்வோம். இவரோடு நமக்கு நேரடியாகப் பழக்கமில்லை. ‘டிவி’ யில் பார்த்துத்தான் அவரை நமக்குத் தெரியும்.
ஆனாலும், இவருக்கும் நமக்கும் தொடர்பு உண்டு என்கிறது ஆறுகோண தத்துவம். அதாவது, உங்கள் இவருக்கும் இடையே அதிகபட்சம் 6 படிகள் தான் உள்ளன. அதைச் சரியாக எடுத்துவைத்தால், உசேன் போல்ட்டை நண்பராக்கிக் கொள்ளலாம். புரியும்படி சொல்வதென்றால், உங்களுக்கு ஒருவரை தெரிந்திருக்கலாம் (அவர் A). அந்த Aக்கு நமக்கு நேரடியாகத் தொடர்பில்லாத ஒருவரைத் தெரிந்திருக்கலாம் (இவர் B). எனவே, B என்பவர் உங்களின் நண்பரின் நண்பர் என்ற வகையில், உங்களுடன் சங்கிலித் தொடர்பு உள்ளவராகக் கருதப்படுவார்.
தேவைப்பட்டால், B ஐ A மூலம் நண்பராக்கிக் கொள்ளலாம். இது ஒருபுள்ளி இடைவெளி. இது போல், உலகின் எந்த ஒரு நபராக இருந்தாலும் சரி, நமக்கும் அவருக்கும் இடையே, மிஞ்சிப்போனால், ஆறு புள்ளிகள் தான் இடைவெளி இருக்கும்.
தோஸ்து தோஸ்துதான்
அப்படிப் பார்த்தால், உசேன் போல்ட் உங்களோடு சங்கிலித்தொடரில் இணைக்கப்பட்டவராக இருப்பார். அதாவது,
நான் ->A->B->C->D->E->உசேன் போல்ட். இவர் மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் என்று அனைவருமே நம் நண்பர்களுக்கு நண்பர்களாகத்தான் (Mutual Friends) இருப்பார்கள். அதற்கு ஒவ்வொரு தொடர்பையும் சரியாகக் கண்டுபிடித்தால், அதிகபட்சம் ஆறு பாய்ச்சலில் யாருடன் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு விடலாம்.

இந்தக் கோட்பாட்டை வைத்து, பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நாடகம் திரைப்படம் போன்றவையும் எடுக்கப்பட்டன.
இணையம் பிரபலமாக ஆக தொடங்கிய காலத்தில், இந்தக் கோட்பாட்டை செயல்படுத்தும் விதமாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்ட்ரூ வீன்ரிச் என்பவர், 1997ல் Sixdegrees.com தொடங்கினார்.
இந்தத் தளத்தின் உறுப்பினர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களை எல்லாம் பட்டியலிட வைக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றொருவரிடம் இருந்து எத்தனை கட்டங்களில் வேறுபட்டிருக்கின்றனர் என்று பார்க்கப்பட்டது. இதில் ஒருவொருக்கொருவர் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். எனினும், சில காரணங்களால் சிக்ஸ் டிகிரீஸ் தளம் 2001ல் மூடப்பட்டுவிட்டது.
புத்துலகு படைத்த தத்துவ தரிசனம்
2002ல் சிக்ஸ் டிகிரீஸ் தளத்தை அடுத்து, ஃபிரண்ட்ஸ்டர் தளம் (Friendster) உருவாக்கப்பட்டது. கனடா நாட்டைச் சேர்ந்த ஜொனாதான் ஆபிரகாம் எனும் இளைஞர் இந்தத் தளத்தை நிறுவினார். ஆறு கோண இடைவெளிக் கோட்பாட்டை, நட்பின் அடிப்படையில் இந்த தளம் முன் வைத்தது. அதாவது உங்கள் நண்பரின் நண்பர் உங்களுக்கும் நண்பர் தானே. இப்படி நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என்று நட்பு வட்டத்தை விரிவாக்கிக் கொள்ள, இந்தச் சேவை வழி செய்தது. நண்பர்கள் மூலம் புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ள வழி செய்த புதிய கருத்து, இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தத் தளத்தில், பத்து லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்து உலகின் கவனத்தை ஈர்த்தனர்.
ஃபிரண்ட்ஸ்டர் ஏராளமான இளைஞர்களை ஈர்த்து விட்டது, சரி. அதன் பிறகு என்ன? ஏராளமான நண்பர்களின் வலைப்பின்னலை வெறுமனே பெரிதாக்கிக் கொண்டே செல்வதால் மட்டும் என்ன பயன் என்று கேள்வி எழுந்தது. இதற்கு, ஃபிரண்ட்ஸ்டர் தளத்தில் பதில் கிடைக்கவில்லை. இதற்கான பதிலை அளித்த சமூக வலைதளம் தான் ஃபேஸ்புக்.
முகம் கொடுத்த ஃபேஸ்புக்
முதலில் அமெரிக்க கல்லூரி மாணவர்களுக்கான சேவையாக அறிமுகமானது ஃபேஸ்புக். நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் மூலமாக, ஒரு வலைப் பின்னலை ஏற்படுத்திக் கொண்டு, சகல விதமான கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளலாம் என்ற வாய்ப்பை வழங்கியது ஃபேஸ்புக். வலைப்பின்னல் யுகத்தில் புதிய அர்த்தம் அளித்த ஃபேஸ்புக் உலகம் முழுவதும் வெகுவேகமாகப் பரவியது.
2004ம் ஆண்டு, அமெரிக்காவின் ஹார்வேர்டு பலகலைக்கழக மாணவர்களுக்காக முதலில் அறிமுகமான இந்தச் சேவையை உருவாக்கிவர் மார்க் ஜூக்கர்பர்க். பின்னர் மற்ற கல்லூரிகளுக்கும் விரிவாகி அமெரிக்காவுக்கு வெளியேயும் அறிமுகமாயிற்று. இன்று ஸ்டேடஸ் அப்டேட் மூலம் நண்பர்களின் நடவடிக்கைகளை அறிந்துகொள்வதும், அவர்கள் மூலமாகவே புதியவர்களின் அறிமுகத்தைப் பெறுவது என்று, பெரும் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது ஃபேஸ்புக்.
வலைப்பின்னல் தளங்களின் பாய்ச்சல்
நண்பர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் அல்லாமல், திரைப்பட விமர்சனம், சமூக கண்ணோட்டம் , செய்திகள், விளையாட்டுத் தகவல்கள், பரிந்துரைகள் என பல்வேறு விஷயங்களுக்கும் சமூக வலைத்தளங்கள் பயன்படுகின்றன. இளைஞர்கள் மட்டும் அல்லாமல் திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் என, பலரும் இவற்றை பயன்படுத்துகின்றனர். இன்று, யாருடனும் நேரடியாகக் கலந்துரையாட முடியும் என்ற சாத்தியத்தை சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தியுள்ளன. யுடியூப் மூலம், வீடியோ வழியாக நம் எண்ணங்களை, மக்களோடு பகிரலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
ஃபேஸ்புக்கிற்கு பிறகு மேலும் பல சமூக வலைப் பின்னல் தளங்கள் அறிமுகமாகி உள்ளன. சரஹா (Sarahah) இப்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. ஆனால் ஃபேஸ்புக்கிற்கு முன்னரே மைஸ்பேஸ் வலைப்பின்னல் சேவையாக அறிமுகமாகி பிரபலமானது பலருக்குத் தெரியாது. 2003ம் ஆண்டு துவக்கப்பட்ட மைஸ்பேஸ், அமெரிக்கர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. முக்கியமாக இசை சார்ந்த பகிர்வுக்கு பயன்பட்ட இந்தச் சேவை, இசை கலைஞர்கள் ரசிகர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் வழி செய்தது. ஆனால், ஃபேஸ்புக் அலையில் மைஸ்பேஸ் பின் தங்கிவிட்டது. ஏறக்குறைய இதே காலத்தில், கூகுலின் ஆர்குட் வலைப்பின்னல் சேவையும் பிரபலமாக இருந்தது.
மைஸ்பேஸுக்கு முன்பாகவே லின்க்ட் இன் (LinkedIn) வலைப்பின்னல் சேவை அறிமுகமானது. 2001ல் அறிமுகமான இந்தச் சேவை முற்றிலும் தொழில் முறையிலானது. வேலையில் இருப்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள், தங்கள் துறையில் உள்ளவர்களோடு தொழில் முறையில் தொடர்புகொள்ள இந்தத் தளம் கை கொடுத்தது. இன்றளவும் தொழில் முறையிலான உறவை வளர்க்க, இது பயன்பட்டு வருகிறது. இன்று ஃபேஸ்புக் தவிர, எத்தனையோ சமூக வலைத்தளங்கள் (Tumblr, Spotify, Foursquare, Pinterest) உருவானாலும், அவற்றுக்கு முதலில் துவக்கப்பட்ட Sixdegrees.com சமூக வலைத் தளமே முன்னோடி.
– மு.கோபி
Comments
Post a Comment