தவறும் நல்லதுதான்! - பேஸ்மேக்கர் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு


சாதாரணமாக ஒரு மனிதனுக்கு இதயத்துடிப்பானது ஒரு நிமிடத்திற்கு 70க்கு மேலாகவும், 100க்குள்ளும் துடிக்க வேண்டும். 70க்கு குறைந்தாலும் 100க்கு மேல் அதிகரித்தாலும் ஆபத்து தான். இப்படி, ஒழுங்காக இயங்காத இதயத்தை இயல்பாக இயங்க வைக்கும் அற்புதமிக்க கருவிதான்  'பேஸ்மேக்கர்'. கோடிக்கணக்கான இதய நோயாளிகளை வாழ்வதற்கு உதவும் இதயத்தில் பொருத்தக்கூடிய பேஸ்மேக்கர் கருவியை கண்டுபிடிக்க மூலகாரணமானவர், வில்சன் கிரேட் பேட்ச். 1919, செப்டம்பர் 6ல், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பபல்லலோவில் பிறந்தார்; இவரது பெற்றோர் பிரிட்டன் நாட்டில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறியவர்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்க கப்பற்படையின் ரேடியோ தகவல்தொடர்பு பிரிவில் தலைமை அதிகாரியாக பணியாற்றினார் கிரேட்பேட்ச். பின்னர், கார்னல் பல்கலைக்கழகத்தில் மின்னணு பொறியியல் படிப்பு முடித்த அவர், பஃபல்லோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். பல பொருட்களை கிரேட் பேட்ச் கண்டுபிடித்திருந்தாலும், பேஸ்மேக்கர் கருவியை அவர் கண்டுபிடித்தது எதேச்சையாகத்தான்.

1958ல், இதய துடிப்பைப் பதிவு செய்யும் கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதய நோயாளி ஒருவரிடம் கருவியை பொருத்தி பரிசோதித்த போது, இதயம் சரியாக துடிப்பதை கண்டு அவர் ஆச்சர்யமும் குழப்பமும் அடைந்தார். மீண்டும் அந்த கருவியை வைத்து சோதனை செய்ததில், இதயத்துடிப்பு சீராக இயங்குவதை கண்டு திகைத்து போனார். பின்னர், கருவியை ஆய்வு செய்து பார்த்த போதுதான், இதயத்துடிப்பை கண்காணிக்கும் கருவியில், ரெசிஸ்டர் பகுதி மாற்றி தவறாக பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

1960ல், பேட்ச் செய்த ஒரு சிறு தவறால், உருவான அற்புதமிக்க பேஸ்மேக்கர் கருவி, 77 வயதான இதய நோயாளியிடம் பொருத்தி சோதனை செய்யப்பட்டது. அந்நோயாளி வெற்றிகரமாக, 18 மாதங்கள் உயிரோடிருந்தார். அந்த காலத்தில், இருதய தமனிகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை போக்க பெரியகருவியைக் கொண்டு, 'ஷாக்' கொடுப்பர். அதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். மேலும், இதயமும், அதன் துடிப்பு களையும் சரியாக இயங்க, 'பேஸ்மேக்கர்' போன்ற கருவி, 'பூட்டு போல' வெளியே தொங்கிக் கொண்டிருக்கும். அந்த நிலையை முற்றிலும் மாற்றுவதாக வில்சன் கிரேட் பேட்சின் கண்டுபிடிப்பு மாறியது.

அதை, அடுத்த இரண்டு ஆண்டுகளில், இதயத்தின் அருகிலேயே வைத்து வெளியே தெரியாத அளவிற்கு பொருத்தக்கூடிய கருவியாக மேம்படுத்தினார் பேட்ச். 40 கிராம் எடை கொண்டிருந்த அக்கருவியில் பேட்டரி, மின் தூண்டல்களை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர், சிறிய எலெக்ட்ரானிக் சர்க்யூட், இதயத்தின் அறைகளுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்லும் வயர்கள் ஆகியவை இருந்தன.

ஒரு கடிகாரத்தைப் போல இயங்கிக்கொண்டிருக்கும் இக்கருவியில், இதயம் எத்தனைமுறை இயங்க வேண்டும் என்று நிரல் எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ப மின் தூண்டல்களை உருவாக்கி இதயத்துக்கு அனுப்புவதுதான் பேஸ்மேக்கரின் வேலை. இதன் பலனால் இதயத்துடிப்பு சீராகி விடும்

1962ல், இதயத்தில் பொருத்தக்கூடிய பேஸ்மேக்கர் கருவிக்கு காப்புரிமை பெற்ற அவர், நிறுவனம் ஒன்றை( Wilson Greatbatch Ltd) தொடங்கி, லித்தியம் பேட்டரி பேஸ்மேக்கர் கருவிகளை தயாரிக்க ஆரம்பித்தார். அவர் காலத்தில் சில ஆண்டு ஆயுள் கொண்டதாக இருந்த பேஸ்மேக்கர் கருவி, தற்போது பல ஆண்டுகள் இதயத்தை பாதுகாக்கும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. 160 கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரான கிரேட்பேட்ச், 2011 செப்டம்பர் மாதம் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

துளிகள்

உலகம் முழுக்க, சுமார், 4 கோடி மக்கள், பல்வேறு இதய நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவற்றில் சீரற்ற இதயத்துடிப்பும் ஒரு பிரச்னை.

நவீன பேஸ்மேக்கர் மார்பில் இதயம் இருக்கிற பகுதியின் மேல்புறத்தில் அறுவை சிகிச்சை செய்து தசைப் பகுதிக்குள் பொருத்தப்படுகிறது.

இந்த பேஸ்மேக்கரிலுள்ள மிகமிக மெலிந்த கம்பி இதயத்தோடு இணைக்கப்பட்டு விடுவதால், மின்கலத்திலிருந்து வரும் மின் அதிர்வு இதயத்தை சீராக பணியாற்றச் செய்கிறது.


‘நீங்கள் முயற்சி செய்கிற 10 வேலைகளில், 9 வெற்றிபெறாது. ஆனால், வெற்றி பெறுகிற பத்தாவது காரியம், 9 தோல்விகளை சரிகட்டிவிடும்.’ •- வில்சன் கிரேட்பேட்ச்

Comments