பிரஷ் தயாரித்து கோடீஸ்வரரான கைதி

Image result for toothbrush invention

உலகில் தொன்றுதொட்டே வேர், விழுதுகள் மற்றும் குச்சிகளால் பல்துலக்கும் பழக்கம் உள்ளது. எனினும், இன்று நாம் பயன்படுத்தும் நவீன பிரஷ்ஷை கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். 1223ம் ஆண்டில், ஜப்பானிய ஜென் துறவியான டோகன் கிகென் என்பவர் எழுதிய புத்தகத்தில், சீனத் துறவிகள் குதிரை முடிகளை காளை மாட்டின் எலும்பில் பொருத்தி பல்தேய்த்ததாக குறிப்பிடுகிறார். இதுவே, நவீன பிரஷ்ஷுக்கு அடிப்படை. ஐரோப்பாவில், 17ம் நூற்றாண்டு வரை, சீனாவிலிருந்தே பிரஷ்களை இறக்குமதி செய்து வந்தனர். எனினும், 1770ல், இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் ஆட்டிஸ், ஐரோப்பாவுக்குள்ளேயே பெரும் எண்ணிக்கையில் பிரஷ் உற்பத்தியைத் தொடங்கும் வரை, அங்கு துணி, உப்பு மற்றும் கரி ஆகியவற்றைக்கொண்டே பல்துலக்கும் பழக்கம் நிலவி வந்தது.
இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் ஆட்டிஸ் (William Addis)என்பவர், 1770ம் ஆண்டில் கலகத்தை தூண்டியதாக சிறையில் அடைக்கப்பட்டார். பிரஷ்ஷால் பல்துலக்கும் பழக்கம் உடைய ஆட்டிஸுக்கு, அப்போதைய வழக்கப்படி துணி மற்றும் உப்பை தேய்ந்து பல்துலக்கும் பழக்கம் ஒத்துவரவில்லை. ஒருநாள், சாப்பாட்டுக்காகக் கொடுக்கப்பட்ட இறைச்சியிலிருந்து ஒரு எலும்புத் துண்டை தனியாக எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டார். காவலாளியின் உதவியோடு, மிருகத்தின் உடல் முடிகளை பெற்றுக்கொண்டார். தனது ஓய்வுநேரத்தில், அந்த முடிகளை சிறுசிறு தொகுப்பாகச் சேர்த்து கட்டினார் ஆட்டிஸ். பின்னர் எலும்புத் துண்டில் துளை போட்டு மயிர்த் தொகுப்புகளை நிறுத்தி வைத்தார். இவ்வாறே, பிரஷின் தயாரிப்பு முறையில் கைதேர்ந்தார்.
1780ல் ஜெயிலில் இருந்து வெளியே வந்த வில்லியம் ஆட்டிஸ், தனது பிரஷ் வியாபாரத்தை தொடங்கினார். சீன பிரஷ்களை விட, குறைவான விலையில் அவர் பிரஷ்களை விற்பனை செய்ததால், அவற்றுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. நாளுக்கு நாள் புதிய மாறுதல்கள் மற்றும் மெருகேற்றத்துடன் பல ஆயிரம் பிரஷ்களை தயாரித்து விற்பனை செய்தார் ஆட்டிஸ். எனினும், 1938ல் நைலான் டூத்பிரஷ் உருவாக்கப்படும் வரை குதிரை மற்றும் பன்றி ரோமங்களை பயன்படுத்தியும், கைப்பிடிக்காக விலங்குகளின் எலும்புகள், பீங்கான் பிடிகள், மரக்கட்டைகளை போன்றவற்றை பயன்படுத்தியே அவருடைய நிறுவனம் பிரஷ் தயாரித்து வந்தது.
மு.கோபி

Comments