
நாம் அணியும் ஜீன்ஸ் பேன்ட், லக்கேஜ், கைப்பை, முதுகுப்பை என்று பலவற்றிலும் ஜிப் பயன்படுகிறது. ஆனால், ஜிப் இல்லாத காலத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள்... கொக்கிதான் அவர்களுக்கிருந்த ஒரே வழி. இதிலிருந்து வித்தியாசமான முறையை கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்பிய அமெரிக்கரான விட்காம்ப் ஜட்சன் (Whitcomb Judson) என்பவர் உருவாக்கியதுதான் ஜிப். ஜட்சன், காற்றழுத்தத்தில் இயங்கும் ரயிலை வடிவமைப்பதில் தீராத ஆர்வம் கொண்டிருந்த பொறியியலாளர். ஆனால், அதை விட அவர் ஜிப் கண்டுபிடிக்கப்பட்டதற்கு தான் இன்றளவும் நினைவு கூரப்படுகிறார். 1893ல், ஷூவில் பொருத்தப்படும் ஜிப்பை உருவாக்கி அதற்காக காப்புரிமை எடுத்து வைத்துக்கொண்டார். அந்த வருடம் நடந்த உலக கண்காட்சியில், ஜிப்பை விற்பனைக்கு வைத்தார். ஆனால், பல லட்சம் பேர் பார்வையிட்ட அந்த கண்காட்சியில், ஜிப்பை இருபது பேர்கூட விலைக்கு வாங்கவில்லை.
எந்தக் கண்டுபிடிப்பும், அதன் ஆரம்பநிலையில் எடுத்த உடனேயே வரவேற்பைப் பெறாது என்பதுதானே எதார்த்தம். அதை நன்றாக புரிந்து வைத்திருந்த ஜட்சன், மனம்தளராமல் தனது கண்டுபிடிப்பை மெருகேற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில், சுவீடன் நாட்டை சேர்ந்த பொறியியலாளரான கிடியோன் சண்ட்பேக் ( Gideon Sundback), ஜட்சனின் ஜிப் மாடலில் பல மாற்றங்கள் செய்து, இன்று நாம் பயன்படுத்தும் ஜிப்பை வடிவமைத்தார். இதுவும் கூட, கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பரவலாக புழக்கத்துக்கு வந்தது. தான் கண்டுபிடிக்கும் ஜிப், இவ்வளவு பயனுள்ள பொருளாக மாறப்போகிறது என்பதை ஜட்சனே எதிர்பார்த்திருக்க மாட்டார். அன்றாட வாழ்க்கையின் பல இடங்களில் பயன்படும் ஜிப், உண்மையில் மகத்தான கண்டுபிடிப்புதான்.
– மோகன்
Comments
Post a Comment