ஒட்டிக்கோ கட்டிக்கோ! ‘வெல்க்ரோ’ தோன்றிய கதை


‘வெல்க்ரோ’ (Velcro) என்ற ஒட்டும் பட்டையின் பயன்கள் ஏராளம். நமது காலணிகள், பைகள் என்று பல இடங்களிலும் இதைப் பயன்படுத்துகிறோம். அது உருவானது எப்படி தெரியுமா? ஜார்ஜ் மெஸ்ட்ரால் (George Mestral) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மின் பொறியியலாளர் தான் அதை உருவாக்கினார்.
1941ல், மெஸ்ட்ரால் ஒருநாள் நியூசிலாந்தை ஒட்டியுள்ள ஆல்ப்ஸ் வனப்பகுதிக்கு தனது நாயை கூட்டிக்கொண்டு வேட்டைக்காக சென்றார். அப்போது எதேச்சையாக, அவருடைய சாக்ஸில் காட்டுத் தாவரத்தின் சிறுவிதைகள் (burdock burrs) ஏராளமானவை ஒட்டிக்கொண்டன. அந்த சாக்சை கழற்றி, லென்ஸ் உதவியுடம் அதை உன்னிப்பாக கவனித்தார். சிறுவிதைகளால் எப்படி சாக்சில் ஒட்டிக்கொள்ள முடிகிறது என்பதை கூர்ந்து ஆய்ந்தார். அப்போது, துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அவற்றில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். பிசிர் கொண்ட துணிகளிலும், விலங்கு ரோமங்களிலும், தலைமுடியிலும் இதுபோன்ற முட்கள் எளிதாக ஒட்டிக்கொள்ளும் என்பதை கண்டறிந்தார். அதே யோசனையைக் கொண்டு, ஒட்டும் பட்டையை உருவாக்க முடியுமா என்று மெஸ்ட்ரால் சிந்தித்தார். அதற்காகப் பல ஆண்டு காலம் உழைத்தார்.
இறுதியாக, 1955 ல் இரண்டு துண்டுத் துணிகளைப் பயன்படுத்தி இணைப்பு பட்டையை உருவாக்கினார். ஒன்றில், நூற்றுக்கணக்கான சிறு கொக்கிகள் (Hooks) இருந்தன. மற்றொன்றில், நூற்றுக்கணக்கான சிறு வளைவுகள் (Loops) இருந்தன. இரண்டையும் சேர்த்தபோது அவை மிக அழுத்தமாக பற்றிக்கொண்டன. இழுத்தால், இரண்டு துணிகளும் பிரிந்தன. தனது கண்டுபிடிப்புக்கு ‘வெல்க்ரோ’( Velcro) என்று பெயரிட்டார். அதோடு, 1957-ல் அதற்குக் காப்புரிமையும் பெற்றார். அந்தக் கண்டுபிடிப்பு உலக வரவேற்பைப் பெறவே, அவர் பெரும் கோடீஸ்வரானார். வெல்க்ரோ கண்டுபிடிப்பு, தொழிற்துறை, ஸ்நூக்கர், ஸ்னோசூட் போன்ற சிறப்பு உடைகள், சீட்பெல்ட், கைப்பட்டை, உயிர்காக்கும் மருத்துவம் என்று பல இடங்களிலும் பயன்படுகிறது. அவ்வளவு ஏன், நம்ம ஊரில் ‘ஒட்டிக்கோ, கட்டிக்கோ’ வேட்டியை இழுத்துப் பிடித்து நிறுத்துவதே ‘வெல்க்ரோ’தான்.
– மு.கோபி


என்னா நீளம்!

1955ல் வெல்க்ரோ நிறுவனத்தை தொடங்கி, ஒட்டுப்பட்டைகளை தயாரிக்கத் தொடங்கிய மெஸ்ட்ராலின் ஆண்டு உற்பத்தி என்ன தெரியுமா? 18 கோடி அடி நீள ஒட்டுப்பட்டை. அதாவது அவற்றை விரித்தால், 55 ஆயிரம் கி.மீ., நீளம் வரை செல்லும். இன்னும் இதன் பிரம்மாண்டத்தை படம்பிடிப்பதென்றால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நான்கு முறை அந்த ஒட்டுப்பட்டையை நீட்டி கற்பனை செய்து கொள்ளுங்கள்-.

Comments