பற்பசைக்குள் இத்தனை வரலாறா?



பல்துலக்கி வாய்த்தூய்மையைப் பேணும் பழக்கம், நவீன காலத்தில் புதிதாக ஏற்பட்ட ஒன்றல்ல. இந்திய மக்களிடம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தினந்தோறும் காலையில் எழுந்ததும் பல்துலக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. ஆனால், பல்துலக்கிய உடனே புத்துணர்வு தரும் பல்பொடி எப்போது உருவானது தெரியுமா?

எகிப்தில் ஆரம்பகாலத்தில், பல்துலக்க சாம்பல் பயன்படுத்தப்பட்டது. எனினும், அதனினும் மேம்பட்ட பல்துலக்கு சாதனத்தைக் கண்டுபிடிக்க வேண்டி, பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டனர். இறுதியாக, உப்பு (Salt), புதினா இலை (Mint Leafs), ஐரிஸ் மலர் (Iris Flower), மிளகு (Pepper) ஆகியவற்றுடன் இருபது வகை தானியங்களைச் சேர்த்துப் பொடியாக்கி, கி.பி. 4ம் நூற்றாண்டில் (400 AD) உலகின் முதல் பற்பொடியை (Tooth powder) தயாரிப்பதில் வெற்றியடைந்தனர்.

ராஜ வம்சத்தினர் மட்டும் பயன்படுத்திய இந்த பற்பொடியின் தயாரிப்பு முறை பற்றிய குறிப்புகள், இன்றும் ஆஸ்திரியா நாட்டின் (Austria) தலைநகர் வியன்னாவில் (Vienna) உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட பற்பசையின் வரலாறு கி.பி. 9ம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. எகிப்தியர்களின் பற்பொடி தயாரிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு பெர்சியாவை(இராக்கை) சேர்ந்த பல்துறை (Polymath) வல்லுனரான ஷிர்யாப் (Ziryab, 789 AD) என்பவர் புதிய வகைப் பற்பசையைக் கண்டறிந்தார்.

ஷிர்யாப் தனது பற்பொடியைத் தயாரிக்க என்னென்ன பொருட்களை பயன்படுத்தினார் என்பதை கடைசி வரை ரகசியமாக வைத்திருந்தார். இதனால், அவர் எப்படி பற்பொடியைத் தயாரித்தார் என்பது வெளியுலகிற்கு தெரியாமலேயே போனது. சுவைமிக்கதாகவும், நறுமணம்மிக்கதாகவும் இருந்த ஷிர்யாப்பின் பற்பொடி, இன்றைய நவீன பற்பொடியைப்போல பல்துலக்கியதும் புத்துணர்ச்சி ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. உலகின் முதல் பற்பசை என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவருடைய தயாரிப்பு, ஸ்பெயின் நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

எனினும், உலக அளவில் 1850ம் ஆண்டு வரை பெரும்பாலான நாடுகளில் சாம்பல் தான் முக்கிய பற்பொடியாக இருந்துவந்தது. இந்நிலையில், கி.பி.18ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் தான் இங்கிலாந்திலும், அதைத்தொடர்ந்து அமெரிக்க மக்களிடையேயும் பல்துலக்கும் பழக்கம் ஏற்பட ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சாம்பலை பயன்படுத்திய இவர்கள், நாளடைவில் உப்பு (Salt), படிகாரம் (Alum), லவங்கப்பட்டை (Cinnamon), ஆகியவற்றை சேர்த்து அரைத்த பொடியைக் கொண்டு பல் துலக்க ஆரம்பித்தனர்.

அதைத்தொடர்ந்து கி.பி.1824ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த பீபாடி (Dr. Peabody, Dentist) என்ற பல் மருத்துவர், பற்பொடியோடு சேர்த்து சோப்பையும் (Detergent Soap) பயன்படுத்தினார். தொடர்ந்து 1850ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஹாரிஸ் (Dr. John Harris, Dentist) என்ற பல் மருத்துவர், மேற்சொன்ன மூலப்பொருட்களுடன் சுண்ணாம்பையும் (Chalk) சேர்க்கப் பரிந்துரைத்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த, வில்லியம் கோல்கேட் (William Colgate, 1783 – 1857) என்பவருக்குச் சொந்தமான நிறுவனம், உப்பு (Salt), படிகாரம் (Alum), சுண்ணாம்பு (Chalk) ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பற்பொடியை, 1873ல் விற்பனை செய்ய ஆரம்பித்தது. ஆனால், சுண்ணாம்பு கலந்து தயாரிக்கப்பட்ட பற்பொடி, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் மீண்டும் சாம்பலை நோக்கித் திரும்பினர்.

அப்போது, இங்கிலாந்தைச் சேர்ந்த வாஷிங்டன் வென்ட்வொர்த் ஷெப்பில்டு (Washington Wentworth Sheffield) என்ற பல் மருத்துவர், இயற்கையாக கிடைக்கும் கால்சியம் புளோரைடுகளை (Calcium Fluoride) கொண்டு பற்பசை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதோடு, பற்பசையை அடைத்து விற்பதற்காக மடக்கு குழாய்களை (collapsible tube) தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் கண்டறிந்தார். 


இதுவே, இன்றைக்கு நாம் பயன்படுத்தும் பற்பசைக்கு அடிப்படையாக உள்ளது. இரண்டையும் ஷெப்பில்டு காப்புரிமை பெறுவதற்குள் கோல்கேட் கம்பெனி இவர் தயாரித்த அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பற்பசை (Toothpaste) தயாரித்து மடக்கு குழாய்களில் விற்பனை செய்ய ஆரம்பித்தது.

Comments